25 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவை கொண்டாடும் 'முரட்டு பக்தர்' - வருடாவருடம் 'சிலுக்கு' கேலண்டர் வழங்குகிறார்.
நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு கோவில் கட்டாத குறையாக தனது டீக்கடையில் படங்களாக மாட்டி வைத்து கொண்டாடி வருகிறார் ஈரோட்டை சேர்ந்த சில்க் ஸ்மிதாவின் முரட்டு ரசிகர் ஒருவர். இவரை முரட்டு ரசிகர் என்று சொல்வதை விட சில்க்ஸ்மிதாவின் முரட்டு ‘பக்தர்’ என்று சொல்வது தான் சரியாக பொருந்தும். 


தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர் விஜயலட்சுமி என்கிற சில்க்ஸ்மிதா. நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிக்காரன் எனும் படத்தில் சில்க் எனும் கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார்.

அந்த கதாபாத்திரத்தின் பெயரே அவரை அழைக்கும் பெயராக மாறிப் போனது.

சில்க் ஸ்மிதா என்றாலே கவர்ச்சி நடன நடிகை என்று அனைவரது எண்ணத்திலும் பதிந்து இருக்கிறது. அந்தளவுக்கு சில்க்ஸ்மிதாவின் கவர்ச்சி நடனங்களும், கண்பார்வையும்,  ‘90ஸ் கிட்ஸ்” மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரிடையே பிரபலமாகி இருந்தது. ஆனால் ஈரோட்டில்  டீக் கடை வைத்து நடத்தும்  குமாரின் நினைவுகளில் சில்க் ஸ்மிதா தைரியமான நடிகை என்றே பதிவாகி உள்ளார்.


ஈரோடு பேருந்து நிலையம் அருகே  நாச்சியப்பா வீதியிலுள்ள பிரியா டீ ஸ்டால் தற்போது சிலுக்கு கடை என்றே அழைக்கப்படுகிறது. உள்ளே நுழைந்தால் திரும்பிய பக்கமெல்லாம் சில்க் ஸ்மிதாவின் ரசிக்கவைக்கும் படங்கள் நிரம்பி உள்ளது. கவர்ச்சி நடிகை என்ற பார்வையையே மாற்றும் அளவுக்கு அங்கு இருக்கும் புகைப்படங்கள் நம்மை வசீகரிக்கின்றன. கடையின் சுவர், மேற்பகுதி, குளிர்சாதன பெட்டி என எங்கெங்கும் சில்க் ஸ்மிதாவின் அழகான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

இதில் இன்னும் ஒரு படி மேலாக வருடம் தோறும் அவரது புகைப்படம் உள்ள கேலண்டர்  தயார் செய்து,அதை தனது நண்பர்களுக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். தினமும் சில்க் ஸ்மிதா படத்திற்கு ஒற்றை ரோஜாவும் வைத்து விடுகிறார். இப்படி சில்க் ஸ்மிதா இறந்த பிறகும் 25 ஆண்டுகளாக அவர் நினைவை போற்றுகிறார். 

கடை முழுவதும் சில்க் ஸ்மிதா படம் இடம்பெற்றுள்ளது குறித்து கடையின் உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, ‘தமிழ் திரையில் மிகவும் தைரியமான நடிகை சில்க் ஸ்மிதா மட்டுமே, இயக்குனர் பாலுமகேந்திராவால் கேமராவுக்கு ஏற்ற முகம் உள்ள நடிகை என பெயர் வாங்கியவர் இவர். தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான டிசம்பர் 2 ஆம் தேதி,அடுத்த ஆண்டுக்கான காலண்டர்களை அவரது படத்துடன் அச்சிட்டு நண்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வழங்கி வருவதாகவும், இதில் முத்தாய்ப்பாக மதுரை மற்றும் சென்னையில் இருந்து அவரது தீவிர ரசிகர்கள் சிலர் இந்த நாட்காட்டியை  ஈரோட்டுக்கு வந்து வாங்கி செல்வதாக தெரிவித்தார்.

முதன் முறையாக கடைக்கு  வரும் வாடிக்கையாளர்கள்  சற்றே அதிர்ச்சி அடைந்தாலும்,பின்னர் அவர்கள் சில்க் ஸ்மிதா படத்துடனும், சில்க் ஸ்மிதாவின் முரட்டு பக்தரான குமாருடனும் செல்பியும்  எடுத்துச் செல்கின்றனர்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது பலரின் கனவுகளை கலைத்து கொண்டிருந்த சில்க் ஸ்மிதா, இறந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும்,  குமாரின் நினைவுகளில் வாழ்கிறார். 

சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளான (செப்டம்பர். 23) இன்று சில்க் ஸ்மிதாவின் நினைவலைகள் இங்கு நிரம்பியிருக்கிறது.

-கொங்கு தளபதி