சிறுநீரை குடிநீராக்கிய அரசியல்!

 

நாம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்பவர்கள் என்று சொல்கிறோம். இந்தியாவின் ஜனநாயகம் வியக்கத்தக்க பல சாதனைகளைப் படைத்து இருந்தாலும், அருவருக்கத்தக்க அசிங்கங்களையும் அரங்கேற்றியிருக்கிறது.



ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்த நேரம், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்நாராயணன் நிருபர்களை அழைத்தார். “நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? என்று புன்னகையுடன் கேட்டார்.

“காலையில் எழுந்ததும் பலரும் காபி _ டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது” என்று கூறிய ராஜ்நாராயணன், அடுத்து கூறியதுதான் இந்திய நாட்டின் அரசியலையே மாற்றிப் போட்டது.





குரலில் குறும்பை தடவிக் கொண்டு மெல்லிய குரலில் ராஜநாராயணன் சொன்னார் “நான் தினமும் காலையில் என் சிறுநீரில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்” என்றார். 


ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகை தூண் நாற்காலிகள் நடுங்க அமர முடியாமல் அதிர்ச்சியோடு நெளிந்தது.


உப்பு சப்பு இல்லாத செய்திகளுக்கு மத்தியில் “உப்பாகவே” ஒரு செய்தி கிடைத்துவிட்ட வேகத்தில் நிருபர்கள், அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவிக்க அவசரமாகக் கிளம்பினார்கள். 

அதற்குள் என்ன அவசரம் என்ற ராஜ்நாராயணன். 


ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட குண்டுகளை விட பலமான இரண்டு குண்டுகளைப் போட்டார். 


“நான் கூறிய மருந்தின் மகிமை, என் குரு உள்துறை மந்திரி சரண்சிங்குக்கும் தெரியும். அவரும் அதை தினமும் அருந்துகிறார். என்று கூறிய ராஜ்நாராயணன் மேலும் இந்த மருத்துவ முறையைப் பின் பற்றி சிறுநீர் அருந்துவோர் பட்டியலில் நமது பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் இருக்கிறார்கள். என்று போட்டாரே ஒரு போடு.


மறுநாள் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியான தலைப்பு இதுதான் “சிறுநீர் குடிக்கும் இந்திய மந்திரிகள்” 


“கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை இல்லையா?” கொந்தளித்தார் மொரார்ஜி தேசாய். அதற்குள் மூத்திர புயல் கரையை கடந்து விட்டது. இந்த புயல் மொரார்ஜி தேசாய் ஜனதாக் கட்சி என்று இந்தியாவையே பலத்த சேதத்திற்கு உள்ளாக்கி இருந்தது. 


பிரதமராகவே இருந்தாலும், மொரார்ஜி தேசாயால் எத்தனை கோடி பேரை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்துவிட முடியும். 


99 ஆண்டு காலம் வாழ்ந்த மொரார்ஜி தேசாய் வாழ்ந்த காலத்தில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இந்தப் பழியில் இருந்து விடுபடவே முடியவில்லை.


யார் இந்த ராஜநாராயணன்? மொரார்ஜி தேசாய் மீது ஏன் இந்த பழியைப் போட்டார்?


1971 இல் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர்தான் இந்த ராஜ்நாராயண். தோற்றத்தோடு நில்லாமல் தேர்தலில் வெற்றி பெற இந்திரா காந்தி ஊழல் புரிந்தார் என்று வழக்கும் தொடுத்தார். 


இந்த வழக்கில் 1975 ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி “ஜெகன்மோகன் சின்கா” இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்தார்.


அதன் பின்னர்தான் இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட ராஜநாராயணன் 1,77 ,729 வாக்குகளைப் பெற, இந்திரா காந்தி 1,22,517 வாக்குகளைப் பெற்று சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.


1947 இல் தொடங்கி 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை அகற்றி காங்கிரஸ் அல்லாத பிரதமராக 1977 மார்ச் 24_ந்தேதி பிரதமராகப் பதவி ஏற்றார் மொரார்ஜி தேசாய்.


14 மந்திரிகளோடு பதவியேற்ற மொரார்ஜி தேசாய் 28ஆம் தேதி பாபு ஜெகஜீவன்ராம், பகுகுணா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரிஜ் லால் வர்மா இவர்களோடு சுகாதாரம் மற்றும் கருத்தடை துறை அமைச்சராக ராஜ் நாராயணனையும் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.


ஆட்சியாளர்களின் கவனம் முழுக்க முழுக்க இந்திரா காந்தியையும் சஞ்சய் காந்தியையும் பழிவாங்குவதிலேயே இருந்தது. அப்போதுதான் கர்நாடகாவில் சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் இந்திரா காந்தி. 

உடனே பாராளுமன்றத்தைக் கூட்டி இந்திரா காந்தியின் எம்.பி., பதவியை ரத்து செய்து, அவரை சிறையில் அடைத்தது மத்திய அரசு. அந்த சமயத்தில்தான் “மூத்திர குண்டை” தூக்கிப் போட்டார் ராஜ் நாராயணன்.ராஜநாராயணனின் நோக்கமெல்லாம் அவருடைய குருநாதர் சரண் சிங் பிரதமராக வேண்டும் என்பதே, ஒருவழியாக ராஜநாராயணன் அதையும் சாதித்துக் காட்டினார் 28. 7. 1979 அன்று சரண் சிங் இந்தியாவின் பிரதமரானார். நாட்டின் பிரதமராக இருந்த சரண் சிங் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை சந்திக்க வில்லை என்பதுதான் வரலாறு.

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் பண்பாடுள்ள, அரசியல் ஒழுக்கம் மிக்க, பல்துறை ஞானம் பெற்ற, முதிர்ச்சியுள்ள அரசியல்வாதியாக இந்திய அரசியலில் அடையாளம் பெற்ற மொரார்ஜி தேசாய், தன் உண்மையான நியாயத்தை நிரூபிக்க முடியாமலேயே மறைந்தும் போனார். நல்லவனாக இருப்பதை காட்டிலும் மிகவும் கடினமானது நான் நல்லவன் என்று நிரூபித்துக் காட்டுவதுதான்.

சரண்சிங் அரசின் 24 நாட்கள் ஆட்சியோடு ராஜநாராயணன் அரசியலும் முடிந்துபோனது. ஆனால் வரலாறு மொரார்ஜி தேசாயை இன்னும் சந்தேகமாகவே பார்க்கிறது. 

ராஜநாராயணனை “அரசியல் கோமாளி” என்று வர்ணிப்பார்கள். 

ராஜநாராயணனா கோமாளி? 

இல்லை யார் கோமாளி? இக்கட்டுரையின் முதல் வார்த்தையைப் பாருங்கள்.

-

-சல்மான் பாரிசு-