சிறுத்தையை பிடித்த 6 மணி நேர திக்.. திக்..போராட்டம்! வனத்துறைக்கு ராயல் சல்யூட்!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் அருகே உள்ள பாப்பாங்குளத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த சிறுத்தை வந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேரையும், மற்றொரு இடத்தில் 2 பேரையும் துரத்தி கடித்தது. மேலும் சிறுத்தை இருந்த இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் அதனை சுற்றி வளைத்த போது வனத்துறை வீரர் ஒருவரையும் கடித்தது. இந்தநிலையில்  வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்த அந்த சிறுத்தை தப்பி ஓடி மறைந்தது. 

 பின்னர் அந்த சிறுத்தை பல்வேறு பகுதிகளில் காணப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இறுதியாக அந்த சிறுத்தை பெருமாநல்லுார் ரிங் ரோட்டை கடந்து பொங்குபாளையம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது. அப்போது பொங்குபாளையம், கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கொண்ணக்காடு பகுதியில் வசித்து வரும் துரை என்பவரது  தோட்டத்தில் அதிகாலை நேரத்தில் துரை பால் கறக்க சென்றபோது சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து துரை போலீசாருக்கும், வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தார். இதனையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி பொங்குபாளையம் மற்றும் சுற்று பகுதி மக்களுக்கு யாரும் வீட்டை விட்டு இரவில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். 

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை கொண்ணக்காடு பகுதியில் உள்ள  துரை தோட்டத்திற்கு மீண்டும் வந்த அந்த சிறுத்தை அங்கிருந்த நாயை கவ்வி சென்றது. மேலும் அந்த தோட்டத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு கிணற்றுக்கு அருகில் அந்த நாயை கடித்து பாதியை சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டு சென்றுவிட்டது..இதுகுறித்து வனத்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர்கள் அப்பகுதி  முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் சிறுத்தை நடந்து சென்ற கால்தடமும், சிறுத்தையின் கழிவும் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அதனை  ஆய்வுக்கு  எடுத்து சென்றனர். 

இதனையடுத்து அப்பகுதியில் சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய பல்வேறு இடங்களிலும்,  மரங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் நாயின் மாமிசத்தை பாதியில் விட்டு சென்றதால் மீண்டும் அந்த இடத்திற்கு வரக்கூடும் என்று அந்த பகுதியில் மேலும் பல கேமராக்களை பொருத்தியதுடன் சிறுத்தை வந்தால் மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் மறைமுகமாக கூண்டு அமைத்து, அதில் தங்கி இரவு முழுவதும் கண்காணித்தனர். 

இந்தநிலையில் பொங்குபாளையம் பகுதியில் சுற்றிவந்த சிறுத்தை அங்கிருந்து காளம்பாளையம் பாறைக்குழி, ஏ.வி.பி பள்ளி அருகில் உள்ள காட்டு பகுதி வழியாக பூண்டி ரிங் ரோட்டை தாண்டி அதிகாலை 5 மணிக்கு நெசவாளர் காலனி பகுதியில் உள்ள சூர்யா நகர் காட்டுப்பகுதிக்கு வந்தது. அப்போது  அந்த வழியாக சென்ற ஒருவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே வனத்துறையினர் உஷாராகி சிறுத்தை சென்ற காலடித்தடத்தை  கண்டறிந்து பின் தொடர்ந்தனர். அப்போது அங்கிருந்த தெருநாய்கள் குறைக்க சிறுத்தை அங்கிருந்து தப்பி அப்பகுதியில் உள்ள பூண்டி நல்லாற்றில் இறங்கி தோட்டத்து வழியாகவே வந்து திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் திருப்பூர் சிட்டி கிளப் எதிரே உள்ள சத்திய நாராயணனுக்கு சொந்தமான வெற்றிவேல் டெக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்தது. பின்னர் அந்த கம்பெனிக்கு பின்புறம் உள்ள விஜய் என்பவரது  பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியில் உள்ள ஒரு தேவையற்ற பொருட்கள் போட்டுவைக்கும் அறையில் போய் தங்கிவிட்டது.

இந்தநிலையில் காலை 6 மணிக்கு அந்த கம்பெனியின் தோட்டத் தொழிலாளி ராஜேந்திரன் சுத்தம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த தகடை எடுத்து அந்த அறைக்குள் போட கதவை திறந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுத்தை இவர் மீது பாய்ந்து கடித்து குதறியது.  இவரது அலறல் சத்தம் கேட்டு கம்பெனி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த எலெக்ட்ரிசியன் வெற்றி ஓடிவர உடனே சிறுத்தை இவர் மீது பாய துரத்தியது.  நிலைமையை அறிந்த வெற்றி அங்கிருந்து தப்பி அருகில் இருந்த சந்தில் புகுந்து ஓடினர். அவரை துரத்தி சென்ற சிறுத்தை இவரை துரத்த முடியாமல் அங்கிருந்த  வேலியை தாண்டி மணியக்காரர் சுந்தரமூர்த்தி தோட்டத்திற்குள் நுழைந்தது. அப்போது ரூமில் மேலும் 4 பேர்கள் இருந்ததுள்ளனர். அவர்கள் பயந்து வெளியே வராமல் கதவை தாப்பாள் போட்டு பயத்துடன் உள்ளேயே இருந்ததால் அனைவரும் சிறுத்தையின் கொடூர தாக்குதலில் இருந்து உயிர் தப்பினர்.

  சிறுத்தை தாக்கியதில் தோட்ட தொழிலாளி ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேநேரத்தில் வனத்துறையினரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வனவர் வெற்றி சிறுத்தையை தேடத்தொடங்க அடுத்த தோட்டத்திற்கு சென்ற சிறுத்தை மேற்கொண்டு எங்கும் செல்ல முடியாததால் மீண்டும் அதேபகுதிக்கு வந்தது. அப்போது சிறுத்தை வனவர் பிரேம்குமாரை தாக்கியது. உடனே அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர். 

 உடனே சிறுத்தை இருக்குமிடம் உறுதி செய்யப்பட்டவுடன் காலை 8 மணிக்கு கோவை மண்டல வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உதவி வன பாதுகாவலர்கள் கணேஷ்ராம், கிருஷ்ணசாமி ஆகியோரது முன்னிலையில் வன சரகர்கள் அமராவதி சுரேஷ், உடுமலை சிவகுமார், காங்கேயம் தனபால், திருப்பூர் பிரவீன் குமார், வனவர்கள்  முருகானந்தம், உமர், கோபாலகிருஷ்ணன், திருமூர்த்தி, குமார் மற்றும் 80 வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் வனத்துறையின் கால்நடை டாக்டர்கள் விஜய ராகவன், சுகுமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர். மேலும், கவுரவ வன உயிரின காப்பாளர் நந்தினி ரவீந்திரன், இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் கோவை ஜலாலுதீன், வால்பாறை கணேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் வனத்துறை வீரர்களுடன் சிறுத்தையை பிடிப்பது குறித்து ஆலோசனை செய்து பின்னர் அந்த இடத்தை சுற்றிவளைத்தனர்.

பின்னர் கம்பெனியின்  2 பகுதிகளில்  பெரிய வலையை கட்டி சிறுத்தையை பிடிக்க முயற்சி நடந்தது. ஆனால் காலை 10 மணியளவில் அந்த சிறுத்தை மீண்டும் புத்தர் மனிசி கிடந்த மணியக்காரர் தோட்டத்திற்குள் சென்று விட்டது. உடனே வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதையும் போலீசாரின் துணையுடன் அவர்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் குவிந்து இருந்த பொதுமக்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர். மேலும் நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் இருந்த வீடுகளில் இருந்தவர்களை வீட்டுக்கு வெளியே வரவேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும் என்று தண்டோரா மூலம் அறிவித்து சென்றனர். 

 இதனையடுத்து ரேஞ்சர்கள் ஒரு ஜீப்பிலும், வனத்துறை கால்நடை டாக்டர்கள் ஒரு பொக்கலின் வாகனத்தின் மண்ணை தள்ளும் பகுதியில் பாதுகாப்பாக நின்றுகொண்டு மயக்க ஊசி நிரப்பட்ட துப்பாக்கியுடன் அந்த மணியக்காரர் தோட்டத்தில் புதர்கள் இருந்த பகுதியில் ரோந்து சென்றனர். பின்னர்   பொக்கலின் மூலம் சந்தேகப்படும்படியான பல்வேறு இடங்களை தோண்டியும் மேடுகளை தள்ளியும் தேடினர். மேலும், வானில் பறக்கும் ட்ரோன் மூலமும் சிறுத்தையின் இருப்பிடத்தை அறிய முற்பட்டனர். பகல் 12 மணி அளவில் அப்பகுதி முழுவதும் தேடியும் சிறுத்தை கிடைக்காததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைத்ததுடன் மனச்சோர்வும் அடைந்தனர். பின்னர் அந்த தோட்டத்தின் பின்பகுதிக்கு சென்று பாரவையிட்டபோது சிறுத்தை சென்ற காலடித்தடத்தை கண்டறிந்தனர். 

வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்துகொண்டிருந்தபோது அந்த பகுதியை சுற்றி இருந்த மாடி வீடுகளில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் சிறுத்தையை பார்த்துவிட்டனர். உடனே எல்லோரும் கோரஸாக சிறுத்தை இங்கு உள்ளது என்று சப்தமிட்டனர். உடனே ஆய்வு செய்து கொண்டிருந்த வனத்துறையினர் மின்னல் வேகத்தில் வாகனத்துடன் வந்து பொதுமக்கள் கூறிய கனகராஜ் என்பவரது தோட்டத்தை முற்றுகையிட்டு தங்களது பணிகளை செவ்வனே செய்யத் தொடங்கினர். இதனால் சிறுத்தை அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது. 

  ஒருகட்டத்தில் மீண்டும் முதலில் நுழைந்த விஜய் கம்பெனியின் காம்பவுண்டை தாண்டி உள்ளே வந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் கம்பெனி மற்றும் பாத்ரூம்களில் தஞ்சம் அடைந்து தப்பினர். சிறுத்தை ஓடிய திசையில் வனவர் குட்டி துரத்தி சென்றபோது திடீரென சிறுத்தை அதேவழியில் திரும்பியது. செய்வதறியாது வனவர்  குட்டி காம்பவுண்டு சுவரில் ஏறி நின்று தப்பிக்க முயன்றார். ஆனால் சிறுத்தை வனவர்  குட்டிமீதும்  பாய்ந்தது. இதில் சிறுத்தையும், வனவர் குட்டியும் கட்டிப்பிடித்த நிலையில் தோட்டத்தில் விழுந்தனர். உடனே கால்நடை  டாக்டர் விஜய ராகவன் மயக்க ஊசி நிரப்பட்ட துப்பாக்கியால் சிறுத்தையை நோக்கி சுட்டார். அதில் சிறுத்தையின் மேற்பகுதியில் ஊசி தாக்கியது.                              அதனால் வனவர் குட்டியை விட்டுவிட்டு சிறுத்தை  கனகராஜின் தோட்டத்தில் புகுந்தது. பின்னர் அங்கும், இங்கும் கர்ஜித்தவாறு அலைந்து சுற்றியது. ஒருகட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கழிப்பிட அறையின் மேலே நின்றுகொண்டிருந்த வனவர்கள் மீது பாய்ந்தது. ஆனால் பாதி மயக்கத்தில் இருந்த சிறுத்தை அதற்கு மேல் பாயமுடியாமல்  அதே இடத்தில் பொத்து என்று கீழே விழுந்து அந்த தோட்டத்தின்  ஒரு மூலையில் மயக்க நிலையில் கிடந்தது. அப்போது வனவர்கள் சிறுத்தை மீது வலையை வீசி பிடிக்க முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து தலையை தூக்கிய நிலையில் சிறுத்தை இருந்ததால் மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 

 சிறுது நேரத்தில் சிறுத்தை முற்றிலும் மயக்க நிலைக்கு வந்தது. உடனே வனத்துறையினர் சிறுத்தையின் மீது சிறுத்தை தப்பிக்காமல் இருக்க வலையை வீசி மூடினர். பின்னர் கூண்டு கொண்டுவரப்பட்டு அதில் ஏற்றினர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சிறுத்தையை பிடுங்கும் பணி மதியம் 2 மணியளவில் அதாவது 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை பிடிபட்டது பணியில் இருந்த வனத்துறையினரும் போலீசாரும்  மகிழ்ச்சியுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது வனத்துறையினர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கட்டிபிடித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

அதேநேரத்தில் பொதுமக்களும்,  தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்து வனத்துறையினருக்கு நன்றி செலுத்தினர். பிடிபட்ட சிறுத்தை ஆண் சிறுத்தை என்றும், அதற்கு 8 வயது இருக்கலாம் என்றும், அதன் எடை 60 கிலோ இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுத்தை பைலட் வாகனத்துடன் 3 வாகனங்களில் அதிகாரிகள் பின்தொடர  பலத்த பாதுகாப்புடன் பொள்ளாச்சி எடுத்து செல்லப்பட்டது. வழியில் இரண்டு இடத்தில சிறுத்தைக்கு தண்ணீர் பாய்ச்சி அதன் உடல் வெப்பத்தை தனித்தனர். இதனால் சிறுத்தை மயக்கம் தெளிந்தது. பின்னர் ஆனைமலை வழியாக வால்பாறை காடம்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது.
                
நிருபர்: ஏ.சபியுல்லா