காசு எல்லோரிடமும் இருக்கும்.... கொடுக்கும் மனம் கடவுளிடம் தான் இருக்கும்... குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் தந்த இந்திரா சுந்தரம்

5 வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக சொந்த பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கி உள்ளார் திருப்பூரை சேர்ந்த சமூக சேவகி இந்திரா சுந்தரம். யாரிடமும் வசூல் ஏதும் செய்யாமல், சொந்த பணத்தை செலவழித்து தொடர்ச்சியாக சேவைகள் செய்யும் இந்திரா சுந்தரத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து இவரது மனைவி கவுசல்யா. முத்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கதிஷ்கா ஶ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு பிறப்பிலேயே இருதய பாதிப்பு இருந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் பல இடங்களில் தம்பதியர் இருவரும் பணத்திற்கு முயன்று உதவி கேட்டுள்ளனர். எங்கேயும் பணம் கிடைக்காத நிலையில் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை மற்றும் ரத்த குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை உடனடியாக செய்தாக வேண்டும் என மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

 பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் நண்பர் மூலம் திருப்பூரை சேர்ந்த சமூக சேவகி இந்திரா சுந்தரம் என்பவர் குறித்து அறிந்தனர். இந்திரா சுந்தரம் கொரோனா காலத்தில் உணவின்றி தவித்த பலருக்கும் தனது சொந்த பணத்தில் பல்வேறு உதவிகள் செய்து வந்தார். 

மேலும் பலருக்கு மருத்துவ உதவிகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். இதற்காக தனது சொந்த பணத்தில் அறக்கட்டளை நிறுவி சேவை செய்து வருகிறார். இந்திரா சுந்தரத்திடம் தங்கள் குழந்தையின் நிலையை பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக குழந்தையை பார்த்த இந்திரா சுந்தரம் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பணம் குறித்து கேட்டறிந்து 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குழந்தையின் பெற்றோரிடம் வழங்கினார். இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். யாரிடமும் பணத்தை பெறாமல் தன்னுடைய சொந்த பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வரும் இந்திராசுந்தரம் மேலும் பலருக்கு உதவி செய்வதற்காக இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் என துவக்கி அதன் மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். 

அவருக்கு திருப்பூர் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.