வர்னணை முதல் தீர்த்தம் வரை... அவிநாசியில் ரோட்டில் தவித்த பக்தர்கள்.... விழா சொதப்பல்களை இனியாவது சரி செய்யுமா இந்து அறநிலையத்துறை?

 *கும்பாபிஷேக சொதப்பல்கள்...*



பெருங்கருணை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்து முடிந்து இருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றார்கள். இந்த விழாவுக்காக பல ஆயிரம் நன்கொடையாளர்கள், சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் எல்லாம் பாடுபட்டார்கள். விழா ஏற்பாடுகளை கவனமெடுத்து செய்தார்கள். 

ஆனாலும் கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறையினர் செய்த சொதப்பல்களால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.



*பாஸ் குளறுபடி*

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வி.ஐ.பி., பாஸ்களை ஆயிரக்கணக்கில் அள்ளி வழங்கி இருந்தார்கள். ஆங்கில எழுத்தான A முதல் G வரை பகுதிகள் பிரிக்கப்பட்டு நன்கொடையாளர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேல் பாஸ்கள் வழங்கப்பட்டு இருந்ததது. அவிநாசியில் தமிழகத்திலேயே  முதல் முறையாக அனைத்துக் கட்சிகள் இணைந்து பாஸ் விவகாரம் தொடர்பாக கூட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தனர் என்பதிலேயே பாஸ் விவகாரம் எந்த அளவுக்கு பிரச்சினை ஆகி இருக்கிறது என்பதை அறியலாம். மேலும் கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாளான 1-ந்தேதி இரவு நூற்றுக்கணக்கானவர்கள் பாஸ் கேட்டு கோவில் அருகே உள்ள அலுவலகத்தில் திரண்டனர். 

பாஸ் பெற்றவர்கள் மட்டும் கோவில் வளாகத்தின் மேல் தளம், உள்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர். முன்வளாகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் அமர வைக்கப்பட்டு இருந்தனர். அதுவும் ஏ பிரிவு பாஸ் தான்.. மற்றபடி சாதாரண பொதுமக்கள் யாரையும் கோவில் வளாகத்துக்கு பக்கத்தில் கூட விடவில்லை என்பதால் கும்பாபிஷேகம் காணவந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். 

மெயின் ரோட்டிலேயே கேட் போட்டு அடைத்து வைத்து பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.  கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கு பாஸ் தராமல் இழுத்தடித்தார்கள். பத்திரிகையாளர்களிடம் கோவில் செயல் அலுவலர் எந்த நேரமும் கோபமாகவே பேசி வெறுப்பேற்றினார். பத்திரிகையாளர் அல்லாத சிலரும் பல்வேறு போர்வையில் உள்ளே வந்தனர். இதனால் இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பாஸ் வழங்கிய விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. 

*கோவிலைக் காண அனுமதி இல்லை:*

பாஸ் வழங்காதவர்களை உள்ளே விடவில்லை. முன்புறமும் இடமளிக்கவில்லை. ஆனால் குறைந்தது தனியாக ஒரு வரிசை அமைத்து கோவில் முன்புறம் வரை வந்து வெளியே நின்று கோபுரங்களை தரிசனம் செய்யவாவது ஒரு வரிசை அமைத்து இருக்கலாம். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மொத்தமாக பக்தர்கள் உள்ளே விடாமல் தடுத்தார்கள். பாஸ் பெற்றதில் பல நூறு பேர் கூட உள்ளே வரமுடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கினார்கள்.

*டி.வி., வசதிகள் குறைவு:*

கும்பாபிஷேகம் காண பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. கோவில் உள்ளே சாதாரண பக்தர்களை அனுமதிக்கவில்லை என்றாகிய பின்னர் கும்பாபிஷேக காட்சிகளை காண மெயின் ரோட்டில் எல்.இ.டி., திரைகளை நிறைய இடங்களில் அமைத்திருக்கலாம். ஆனால் ஓரிரு இடங்களில் மட்டுமே அமைத்து இருந்தார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் கும்பாபிஷேக காட்சிகள் காண முடியாமல் ஆங்காங்கே நெரிசலில் சிக்கி வேதனைப்பட்டார்கள். 




*ஒலி பெருக்கி , வர்னணை:*

கும்பாபிஷேகத்துக்கு வரும் பெரும் கூட்டத்துக்கு, கோவிலுக்கு உள்ளே வர இயலாவிட்டாலும், வெளியே நின்ற போதும் கும்பாபிஷேகம் குறித்த வர்னணைகளாவது கேட்கச்செய்து இருக்கலாம்.. ஆனால் அவிநாசி முக்கிய மெயின் ரோட்டில் கூட தேவையான அளவு ஒலி பெருக்கிகள் அமைக்கவில்லை. இதனால் கூட்டத்தினர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் காத்திருக்கும் நிலையே இருந்தது. மேலும் கும்பாபிஷேகம் தொடங்கும் நேரத்தில் போதுமான அளவு அது பற்றிய விளக்கமான தகவல்கள் சொல்லப்படவில்லை. வர்னணையாளர் வர்னணையை மறந்துவிட்டு வேறு ஏதோ பேசினார். சிவாச்சாரியார்கள் கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றும் நேரத்தில் வர்னணைக்கு பதிலாக பாடல், இசை ஒலிபரப்பியதால், சில நிமிடங்களுக்கு பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் நடந்ததே தெரியவில்லை. ஒவ்வொரு கோவில் கும்பாபிஷேக நிகழ்விலும் வர்னணை தான் தூரத்தில் இருக்கும் பக்தர்களையும் மெய்சிலிர்க்கச் செய்யும். ஆனால் இந்த விழாவில் அதை சரியாக செய்யவில்லை என்று சிவபக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.


*தீர்த்தம்?*

கும்பாபிஷேக நிகழ்வில் பொதுமக்களை பெரிய அளவில் வேதனைப்படுத்தியது தீர்த்தம் தெளிக்கப்பட்ட விஷயம் தான். கோவில் உள்பிரகாரம், முன்புற வளாகத்தில் வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் ஸ்பிரிண்ட்லர்கள் மூலம் கும்பாபிஷேக தீர்த்தம் ஸ்ப்ரே செய்யப்பட்டது. ஆனால் வெளியே இருந்த பக்தர்களுக்கு ட்ரோனில் தெளிக்கப்படும் என்று தகவல் சொல்லப்பட்ட நிலையில், போதுமான அளவு ட்ரோன்கள் இல்லாததால், வெளியில் நின்றவர்களுக்கு தீர்த்தம் வரவில்லை.  தீர்த்தத்தை எதிர்பார்த்து  பொதுமக்கள் காத்திருந்தார்கள். ஆனாலும் கடைசிவரை டிரோன்கள் அனைத்து பகுதிகளிலும் தீர்த்தம் தெளிக்கவில்லை. இதனால் தான் கூட்டத்தினர் பெரிய அளவில் திரண்டு தீர்த்தம் பெற முண்டியடித்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தனர். குழந்தைகள் அழுகுரலும், முதியோரின் வேதனை பெரிய அளவில் காணமுடிந்தது. எப்போதும் போல தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீர்த்தம் தெளித்திருந்தால் கூட அனைவர் மீதும் தீர்த்தம் விழுந்திருக்கும். தீர்த்தம் தெளித்தால் போதுமென்று கூட்டமும் கலைந்திருக்கும். 

*வழிகாட்டி பலகைகள்:*

அன்னதானம், கழிப்பிடம், குடிநீர் வழங்குமிடம் போன்றவற்றுக்கு போதுமான அளவு வழிகாட்டி பலகைகளும் இல்லை. இதனால் கும்பாபிஷேகம் முடிந்ததும் பொதுமக்களில் பாதிக்கும் மேல் அன்னதானம் பெறாமலேயே கிளம்பினார்க்ள். கூட்டம் குறைந்த பின்னர் ஆங்காங்கு அன்னதானத்துக்கு அழைத்தனர். 

*போக்குவரத்து சிக்கல்:*

கோவில் வெளியே ஒரு பார்க்கிங்கில் கூட போலீசார் நிற்கவில்லை. கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த நிமிடமே அனைத்து பகுதி பார்க்கிங்களிலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. குழப்பத்தில் பொதுமக்கள் எதிரெதிர் பகுதிகளில் வாகனங்களை இயக்கினார்கள். இதனால் அவிநாசியின் முக்கிய சாலைகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் தேங்கி நின்றன. 

*போலீஸ் பாதுகாப்பு:*

போலீஸ் பாதுகாப்பு என்பது பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடக்கூடாது என்பதில் மட்டும் இருந்தது. மற்றபடி வெளியே இருந்த பல லட்சம் சாதாரண மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய போது ஒழுங்குபடுத்த போலீசார் யாருமே இல்லை. இதனால் ஒரு பகுதி மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல முயன்றனர். இன்னொரு பகுதியினர் வெளியே வர முயன்றனர். இந்த குழப்பத்தில் ஏற்பட்ட நெரிசலில் பொதுமக்கள் சிக்கித்தவித்தனர்.

இப்படி வழக்கமாக இல்லாத அளவுக்கு இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பல சொதப்பல்களை ஏற்படுத்தி இருந்தனர். இதுபோன்ற சொதப்பல்களை இன்னொரு கோவிலில் ஏற்படாதவாறு கவனிக்க வேண்டியது இந்து அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழுக்களின் முக்கிய பொறுப்பு..

 பல ஆயிரம் பணிகளை சரியாக செய்தாலும் இது போன்ற சொதப்பல்களால் பக்தர்கள் மனவேதனை அடைவதை தடுக்க வேண்டியது கோவில்களை நிர்வகிப்பவர்களின் பொறுப்பு தானே..   

எளியோர்க்கு எளியவனாய் இருக்கும் அய்யன் ஈசனை தரிசிப்பதை வலியோரின் கரங்கள் வழி செய்ய வேண்டுமல்லவா?