லாஜிக் மீறல்கள்... சொதப்பல் கிராஃபிக்ஸ்...ஆஸ்கர் வெல்லுமா ‘தங்கலான்’?

 தங்கலான்’ படத்தையும், ட்ரெயிலரையும் பார்த்து வியந்து போனது மட்டுமல்லாமல், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், பா.ரஞ்சித்தின் நீலம் எல்லாம் சேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் என்கிறபோதே தங்கலான் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமானதில் ஆச்சர்யமில்லை.

பா.ரஞ்சித் மேடைப்பேச்சிலேயே அரசியல் பேசுபவர். கதைக்களத்தில் சும்மா இருப்பாரா என்ன? வெளுத்திருக்கிறார் என்று சொல்லலாம். இல்லை என்றால் வம்பிழுத்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். ஆமாம் இந்தப் படத்தினைப்பார்த்து சர்ச்சைகள் உருவாகும் என்பதை தெரிந்து தான் செய்திருக்கிறார். 

சரி, இந்தப் படத்தில் தங்கலானாக விக்ரம், ஆரத்தியாக மாளவிகா மோகனன், கங்கம்மாளாக பார்வதி  நடித்திருக்கிறார்கள். 

படத்தின் கதை என்னவென்று பார்த்தால் அப்போதைய வட ஆற்காடு மாவட்டமான, குடியாத்தம் வேப்பூரில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தை ஜமின்தார் ஏமாற்றி அதிகாரத்தால் பிடுங்கிக் கொள்கிறார். ஜமின்தாரிடம் இருப்பதை விட வெள்ளைக்காரனுக்கு கூலி வேலை செய்யலாம் என்று டேனியலுடன் கோலார்  பகுதிக்கு தங்கத்தை தேடி செல்கிறார் விக்ரம். 

அங்கு போனதும், இன்னும் ஆட்களை அழைத்து வந்து தங்கம் எடுத்துத்தந்தால், பங்கு தருகிறேன் என்று வெள்ளைக்காரன் சொன்னதை கேட்டு ஊரையே அழைத்துச் செல்லும் தங்கலான், என்ன செய்கிறார்? தங்கம் எடுத்தாரா? இல்லையா? அங்கு என்ன சிக்கல்கள் உருவானது என்பதெல்லாம் தான் கதை. 

படத்தின் ட்ரெயிலரில் விக்ரமின் சண்டைக்காட்சிகளை பார்த்து மிகப்பெரிய போர்ப்படம் என்று எண்ணியவர்களுக்கு கதைக்களம் ஆச்சரியத்தைத்தான் உருவாக்கும். ஆமாம் அது வேறு, இது வேறு.

நிலம் எங்கள் உரிமை என்று பேசும் பா.ரஞ்சித், இந்தப்படத்தினை நில உரிமையை மையப்படுத்தித் தான் எடுத்திருக்கிறார். நெல்வயல்கள், விவசாயம், அறுவடை என்று ஏகபோகமாக வடதமிழ்நாட்டு கிராமங்களை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். ‘மினுக்கி மினுக்கி” பாட்டில் உற்சாகம் பொங்குகிறது. ரசிக்கும் விதமாய் இருக்கிறது. இசையும் அருமை. 

அறுவடை காட்சியில், அறுவடை முடிந்ததும், ஒடுக்கப்பட்ட மக்களிடம், வழக்கம்போல ஒரு கதையை சொல்லி நிலத்தை பிடுங்குகிற காட்சி வைத்தது எல்லாம் பலமுறை பழக்கப்பட்ட காட்சி அமைப்பு தான். இருந்தாலும், இங்கு நில உரிமை மீட்கத்தானே போராட்டம் என்கிற மாதிரி படம் ஆரம்பிக்கிறது என்பதால் பார்த்துத்தானே ஆக வேண்டும். வேறு வழி.

படம் முழுக்க வரும் காஸ்ட்யூம் ஸ்டைல் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தால், டக்கென்று பொன்னியின் செல்வன் பட காஸ்ட்யூம்கள் நியாபகம் வருகிறது. டல் கலரில் சேலை அணிந்து வந்து ஒய்யாரமாய் ஆடும் கிராமியப்பெண்கள் எல்லாம் பார்த்தால், ‘ஆமாங்க அதே தான்” ரகம்.

தங்கம் எடுக்க ஊரையே வேலைக்கு விக்ரம் அழைத்துச் செல்லும் காட்சியிலேயே பலருக்கும் பாலாவின் பரதேசி படம் நியாபகத்துக்கு வரும். பாலாவை விக்ரம் மறந்தாலும், பாலாவின் பாணியிலான நடிப்பு இன்னும் விக்ரமை விட்டுப் போகவில்லை. உடல்மொழியிலேயே நடித்து அசத்தி இருக்கிறார். நிச்சயம் விக்ரமுக்கு சபாஷ் சொல்லலாம். 

அதைவிட கங்கம்மாளாக வந்து சபாஷ்களை அள்ளுகிறார் பார்வதி. கேரளாப்பெண்ணா இவர் என்று சொல்லுமளவுக்கு தமிழ் மக்களைப்போலவே முகபாவனை, உடல்மொழி என்று அசத்தி நடிப்பில் விக்ரமையே வென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி சினிமாவில் கதைகளை வைப்பது, பேசுவது என்று நிறுத்திக் கொண்டு விடலாமா ரஞ்சித்? கேரளாப்பெண்களுக்கு கறுப்பாக மேக் அப் போட்டு தமிழ்ப்பெண்களாக காட்ட கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

படத்தில், அவ்வப்போது கனவு போல வரும் காட்சிகள் எல்லாம், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை நியாபகப்படுத்தினால் கம்பெனி பொறுப்பல்ல. ஃபேண்டசி பாணியில் படத்தை நகர விட்டிருக்கிறார்கள்.  ஃபேண்டசி காட்சிகளின் மேக்கிங்கில் வரும் நபர்கள் எல்லோரும் நம் தமிழின ஆதிகுடிகளைப் போல இல்லாமல், ஹாலிவுட் படங்களில் ஏற்கனவே நாம் பார்த்த கிழக்காசிய, செவ்விந்திய பூர்வகுடிகளைத்தான் நியாபகப்படுத்துகிறது. இதனால் காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கிறது. போதாக்குறைக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. 

ஃப்ளாஸ்பேக்கில் புத்தரின் வசனமான ‘துன்பத்திற்கு காரணம் ஆசை” என்று சொல்ல வைத்து விட்டு, அதே காட்சியில் தங்கத்துக்கு காவல் வைப்பது எல்லாம் பார்க்கும்போது இது ஆசைப்பட்டியலில் வராதா?  என்ன ரஞ்சித் இப்படி பண்றீங்களே? 

சைவம், வைணவம், கிறித்துவம், பவுத்தம் என்று பல வழிபாட்டுமுறைகளை காட்டினாலும், பவுத்தத்துக்கு ரஞ்சித் காட்டும் கரிசனம் படத்தில் அப்பட்டமாக தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் புத்தமத அம்பாசிடராக கூட பா.ரஞ்சித் மாற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லத்தோன்றும். 

பல காட்சிகளில் மாரி செல்வராஜின் பாணியுடன் இணைந்தே பயணிக்கிறார் ரஞ்சித். இதை படம் பார்க்கும்போது நன்றாகவே தெரிந்து கொள்ள முடியும். 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இருந்து சுட்ட காஸ்ட்யூம்கள், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் இருந்து சுட்ட ஃபேண்டசி காட்சி அமைப்புகள், பாலாவின் பரதேசி படத்தின் வாசம், கொஞ்சம் கூட ஒட்டாத கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் சேர்த்தால் தங்கலான். 

அப்புறம் லாஜிக்? அதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்பது மாதிரி ஏகத்துக்கும் லாஜிக் மீறல்கள் இருக்கு. 

புத்தர் சிலைக்கு தலையை வெட்டும் காட்சி அமைத்தது, தங்கலானுக்கு மட்டுமே கண்ணில் தெரியும் ஆரத்தி கேரக்டரை, கண்ணிலேயே கடைசிவரை காணமுடியாத வெள்ளைக்காரன் டேனியல் வெட்டிச்சாய்ப்பது எல்லாம் லாஜிக் மீறலின் உச்சம். 

எதார்த்தமான சண்டைக்காட்சிகள் பாராட்டக்கூடிய ரகம். 

விக்ரம் ரசிகர்கள் கூட விட்டுவிடுவார்கள். ஆனால் பா.ரஞ்சித் ஆதரவாளர்கள் மட்டும் நிச்சயம் ஆஸ்கர்தான், நேஷனல் அவார்டுதான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 

அந்தளவுக்கு எல்லாம் படத்தில் விஷயம் இல்லை. பல படங்களில் பார்த்த ரிப்பீட்டட் சமாச்சாரங்கள் தான் ‘தங்கலான்’!